ஹைக்கூ:
‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக /
கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3
அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டு
‘ஹைக்கூ’ வடிவமாகவும்
அங்கீகரித்துள்ளார்கள். இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் தமிழ் ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம் கொண்டதாக இருப்பது சிறப்பு.
இன்று எழுதப்படுவதெல்லாம் ‘புதுக்கவிதை’ என்பது போல ‘ஹைக்கூ’
பற்றிய சரியான புரிதல் இல்லாமல் 3
அடிகள்கொண்டு எழுதப்படுவது
எல்லாம் ‘ஹைக்கூ’ என்பதால் ஹைக்கூவின் உள்ளடக்கம் தாழ்ந்துபோய்
உள்ளது. ஜப்பானிய ஹைக்கூவின் தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்த்து
விட்டால் 1974இல் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழில் முதன்முதலாக
ஹைக்கூ படைத்துள்ளார். இன்று பல ஆயிரம் பேர் தமிழில் ஹைக்கூ
எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே சில தனி
சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுள்ளன.
ஹைக்கூ மரபுகள்:
1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும்.
2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு
இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது
(குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும்.
கவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று:
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு.
1. ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும்
வெளிச்சப்படுத்த வேண்டும்.
2. மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும்.
3. உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப்
பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும்.
ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான்
இருக்கின்றன.
ஹைக்கூ வாசிப்பு முறை:
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3
அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத்
திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள்
இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும்.
சென்ரியு:
(சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. )
சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென்
தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு
நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும்.
சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும்.
தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு
3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு
‘சென்ரியு’ வடிவமாகவும்
அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த
போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழலுக்கு தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியு’ சிறந்த வடிவம் /உள்ளடக்கம் ஆகும்.
தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘சென்ரியு’ படைத்துள்ளார்.
தமிழில் சிலரே ‘சென்ரியு’ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’
பற்றிய சரியான புரிதல் இல்லாமல் எழுதப்படும் ‘ஹைக்கூ’ எல்லாம்
‘சென்ரியு’ கவிதையாகவே காணப்படுகின்றன.
லிமரைக்கூ:
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5
அடிகளில்
அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம்,
நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது.
தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார்.
தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன்
ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில்
பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி)
அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது. 3
அடிகளிலும் சந்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஈரோடு தமிழன்பன் தமிழுக்கு முதன்முறையாக லிமரைக்கூவை அறிமுகம் செய்து வைத்தபோது சந்தம் கடைபிடிக்கப்பட்டது. (அவ்வாறு சந்தம் அமைத்துக் கொண்டது ஈரோடு தமிழன்பனின் தனி உத்தி.) மூன்று வரி, சந்தம் மட்டுமே லிமரைக்கூ ஆகிவிடாது. ஹைக்கூ, சென்ரியுவின் இணைப்புதான் லிமரைக்கூ.
தேன் நிரம்பி வழிந்தது
வண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது
பூ தலைக் கவிழ்ந்தது
ஜனகணமன பாடியது
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்
அரசியல்வாதி கொட்டாவி விட்டது
இன்று தமிழில் இவ்வகை வடிவங்களைத் தவிர ஹைபுன், லிபுன், குறட்கூ,
சீர்க் கவிதை, கஸல் எனப் பல வடிவங்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன.
குறட்கூ:
குறட்கூ கவிதைகள் என்பது இரண்டடிகளைக் கொண்ட பா வகையாகும். முதலடியில் இரண்டு சீர்களும் இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும் சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக் கவி வடிவம். இக்கவிக்கு வித்திட்டவர் கவிஞர் தணிகைச் செல்வன் ஆவார்.
No comments:
Post a Comment